Wednesday, May 28, 2008

மாமரத்தில் ஊஞ்ச‌ல் க‌ட்டி ...



ஒட்டி உற‌வாடும்
குட்டிப்பூக் கூட்டம்,
பொறாமை கொள்ளும்
காற்றின் சீற்றம்.

உரசும் காற்றினில்
உதிரும் பிஞ்சுக‌ள்,
இருந்தும் கிளை தாழ்த்தி
தரை தொடும் காய்க‌ள்.

கொத்தாய் தொங்கும்
கிளிகளின் மூக்கு,
சத்தாய் விளையும்
சப்பட்டை நாக்கு.

பொன் நிற‌ மேனியில் ...
மென் பட்டு சேலையில் ...
ஊரே தேடிடும்
உன் கனி வண்ணம்.

முக்கனி மூன்றில்
முதன்மை உன்கனி,
சித்திரை வைகாசியில்
மணக்கும் மாங்கனி.

சுவைக்கும் க‌னிக‌ளில்,
எப்புற‌மும் துளையில்லை,
எப்ப‌டி உள் சென்றாய் ?
தொப்பென்று விழும் வண்டே !

எங்கெங்கிலும் மா காய்க்க‌,
இந்திய மா இனிது,
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை
உல‌க‌ம் சொல்லும் அதை.

மா உந்தன் கிளைகளில்
மர ஊஞ்சல் க‌ட்டி ஆட‌,
தேனான‌ இசைபோல‌
தென்ற‌லும் சேர்ந்துவ‌ர‌,

சிற்றெறும்புக் க‌டி ம‌ற‌ந்தேன்,
சின‌ம்கொள் ம‌ன‌ம் ம‌ற‌ந்தேன்,
ஊண் உண்ணவும் ம‌ற‌ந்தேன் ...
உலகையே ம‌ற‌ந்து நின்றேன் !

10 மறுமொழி(கள்):

நானானிsaid...

//எப்புரமும் துளையில்லை
எப்படி உள் சென்றாய்
தொப்பென்று விழும் விழும் வண்டே!//
அருமை சதங்கா!
சீசனுக்கேற்ற அழகான கவிதை.

ராமலக்ஷ்மிsaid...

மாஞ் சுவையிலே மனதைப் பறி கொடுத்து, கவியொன்றும் படைத்து,
மாமரத்து ஊஞ்சலிலே உட்காரவும் வைத்து, 'வழக்கம் போல்' ஆட்டியும் விட்டு எம் நாவிலும் நீருறச் செய்திருக்கிறீர்கள்!

Kavinayasaid...

ஆமாங்க சதங்கா. இந்திய மாங்காயும் இனிது, மாம்பழமும் இனிது! :) மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊட்டுமே :)

//மா உந்தன் கிளைகளில்
மர ஊஞ்சல் க‌ட்டி ஆட‌,
தேனான‌ இசைபோல‌
தென்ற‌லும் சேர்ந்துவ‌ர‌//

நல்லாருக்கு!

நாகு (Nagu)said...

நல்லா ஞாபகப்படுத்தினீங்க. என்னமோ இந்திய மாம்பழத்துக்கு தடை தூக்கியாச்சுன்னாங்க. ஒன்னுமே காணோம் இங்கே. இருக்கற கொஞ்சமும் தங்கம் விலைக்கு இருக்கு. சரி ஊருக்கு போய் பாத்துக்கறேன்.

//சுவைக்கும் க‌னிக‌ளில்,
எப்புற‌மும் துளையில்லை,
எப்ப‌டி உள் சென்றாய் ?
தொப்பென்று விழும் வண்டே !//

அடா அடா - என்ன வியப்பு...

cheena (சீனா)said...

அருமை அருமை

மா - முக்கனிகளில் முதற்கனி - சித்திரை வைகாசியில் மா தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் வலம் வரும். மழலை முதல் முதியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் கனி மா.

இலண்டனில் இருந்த போது எதிரி நாட்டு மாம்பழம் என்று பாகிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட மாம்பழங்களை உண்டு மகிழ்ந்திருக்கிறோம்.

மதுரையில் தற்பொழுது மாம்பழம் இல்லாத நாட்களே கிடையாது

வண்டு உள்ளே சென்றதெப்படி - ஆராய வேண்டுமா ? காவல் துறையை நாடலாமா ?

நல்வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

நானானி மேடம்,

கவிதை வாசித்து ரசித்தமைக்கு நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி,

வருகைக்கு நன்றி. கவிதை போன்ற பின்னூட்டத்திற்கு நன்றிகள் பலப் பல.

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

ரசிப்புக்கும், நல்லாருக்குனு சொன்னதுக்கும் மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

நாகு,

//இந்திய மாம்பழத்துக்கு தடை தூக்கியாச்சுன்னாங்க. ஒன்னுமே காணோம் இங்கே.//

ஆமா இப்ப போயிருந்த டாலஸ்ல கூட இந்தியக் கடைகளில் நம் ஊரு மாம்பழத்தைப் பார்க்க முடியவில்லை.

//சரி ஊருக்கு போய் பாத்துக்கறேன்.//

என்ஸாய் மாடி !!!!

கவிதை வாசித்து, வியந்தமைக்கு நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

பாராட்டுக்கு மிக்க நன்றி.

//இலண்டனில் இருந்த போது எதிரி நாட்டு மாம்பழம் என்று பாகிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட மாம்பழங்களை உண்டு மகிழ்ந்திருக்கிறோம்.//

ஒரு பிழி பிழிந்திருக்கிறீர்கள் :)

//மதுரையில் தற்பொழுது மாம்பழம் இல்லாத நாட்களே கிடையாது//

ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.

//வண்டு உள்ளே சென்றதெப்படி - ஆராய வேண்டுமா ? காவல் துறையை நாடலாமா ? //

வேண்டாம், வேண்டாம். மாம்பழத்தை எல்லாம் திருடிடப் போகிறார்கள் அவர்கள் :)

Post a Comment

Please share your thoughts, if you like this post !